அபியின் அம்மா ,அப்பாவின் முகத்தில் மகிழ்ச்சியாக இருப்பதின் அறிகுறி தென்பட்டது…அம்மா உள்ளே இருந்தாள்…அபியின் தாத்தாவுடன் அப்பா பேசிக்கொண்டிருந்தார்.நேரம் கடந்து கொண்டிருந்தது…மாப்பிள்ளை வீட்டார் வந்த மாதிரி தெரியவில்லை…அபியின் அப்பா போன் செய்யலாமென்று நினைத்தபோது,வீட்டின் முன்பு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க,அனைவரும் வாசலுக்கு வந்து வரவேற்க வந்த போது,அதிர்ச்சியாக இருந்தது..தரகர் மட்டும் வண்டியில் இருந்து இறங்கினார்.காரின் உள்ளே மாப்பிள்ளையின் அப்பா,அம்மா இருந்தனர்…மாப்பிள்ளை பையன் மிஸ்ஸிங்……….. அபியின் அப்பா அவர்களை அழைத்தும்,அவர்கள் வர மறுத்தனர்..பின்பு,போராடிஅவர்களை உள்ளே அழைத்ததும், “சார்..நாங்க ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வர்றோம்..இந்த சம்பந்தத்தில எங்களுக்கு இஷ்டமில்லை….” என்றதும்,அபியின் அப்பா இடைமறித்து… “என்ன இது திடீரென்று…ஏதாவது காரணமா….” என்றதும், அந்த மாப்பிள்ளையின் அம்மா,தனது மூக்கு கண்ணாடியை சரி செய்தவாறே, “இதப்பாருங்க…எங்களுக்கு வர போற பொண்ணு நல்ல பொண்ணாயிருக்கணும்…நாங்க விசாரித்தவரையில அந்த பொண்ணைப்பற்றி….அதனால….” என்றதும் அபியின் அப்பாவுக்கு கோபம் எகிறி , “அப்போ என் பொண்ணு குணத்தை தப்பா சொல்லுறீங்களா?யார் கிட்ட பேசுறோம்ன்னு நினைக்கிறீங்க…தப்பா எதாவது பேசுனீங்க …பல்ல உடைச்சிடுவேன்” என்று அந்த மாப்பிள்ளை அப்பா மீது பாய்ந்தார்….என் அப்பா வந்து அவரை மடக்கி பிடிக்க,அபியின் அம்மா அழ அரம்பித்தாள்…அபியின் தாத்தா,தரகரின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட,கொஞ்ச நேரத்தில் அங்கிருந்த மகிழ்ச்சி,சிறிய குருஷேத்ர போர்களம் போல ஆகியது… தரகர் தனது வாயில் வடிந்த ரத்ததை துடைத்தவாறே,குரலை உயர்த்தி… “சும்ம அடிக்கிறத நிறுத்துங்க..நாங்க காரணம் இல்லாமல் குத்தம் சொல்லல..இதோ இந்த பையனோட தான் உங்க பொண்ணு நல்லா ஊர் சுத்துதாம்…அவங்களுக்குள்ள எதோ இருக்குதுன்னு மாப்பிள்ளை வீட்டாருக்கு நியூஸ் கிடைச்சிருக்கு…நாங்களும்,நல்லா விசாரிச்சு பார்த்தோம்…இவ்வளவு ஏன் …எங்க கண்ணாலயே,நாங்க அவங்க தியேட்டருன்னு பார்க்காமல் கட்டி பிடிச்சிகிட்டு…” என்றதும்,என் அப்பாவுக்கும் ,அம்மாவுக்கும் என்ன சொல்லுறதுன்னு தெரியாமல் அப்படியே உட்கார்ந்தார்கள்… அபியின் தாத்தா மாப்பிள்ளையின் அப்பாவை பளாரென்று அறைந்து வேளியே தள்ள,நடந்தவைகளை எல்லாம் பார்த்து கொண்டு அழ ஆரம்பித்து அவளது அறையை நோக்கி ஓடிய அபியின் பின்னாடி அபியின் பாட்டியும் எனது அம்மாவும் ஓடினார்கள்…அபி கதவை உள்ளே தாளிடும் முன்பே கதவை திறந்து,அபியை அணைத்தவாறே அபியின் அம்மா அழத்தொடங்கினாள்…. எனக்கு நடந்தவை எல்லாம் கனவா..இல்லை நனவா என்று கூட தோன்றாமல் நின்று கொண்டிருந்தேன்.. அபியின் அப்பாவும்,அம்மாவும் உடைந்து போனார்கள்…அபியின் அப்பா,என் அப்பாவிடம், “டேய்..அந்த நாய் இப்படி சொல்லிட்டானேடா…நீ ஒண்ணும் தப்பா நினைக்காதடா…அவன் நாக்க அறுக்கனும் போல இருக்கு…” என்றதும், “சரிடா… கண்ட பரதேசிக்கும் நாம ஏன்டா பதில் சொல்லணும்? அவன் கிடக்கிறான்” என்று சொல்லி என்னை அணைத்து கொண்டார்..
அபியின் அப்பாவும்,என் கைகளை பிடித்து “சாரி ரகு…உன்னைப்போய்..”என்று சொல்லி கலங்கியதும்,என்னால் அழுகையை கட்டுபடுத்தமுடியவில்லை.எதோ ஒரு குற்ற உணர்வால் துடித்தேன்… அபியின் பாட்டி,அபியை கையால் அணைத்து, கூட்டி வந்து அங்கிருந்த ஷோபாவில் உட்கார வைத்தாள்…எல்லோருக்குமிடையே ஒரு மௌனம் நிலவியது… “இப்படி ஆளாளுக்கு உட்கார்ந்திருந்தா எப்படி…” என்று பாட்டி மௌனத்தை உடைத்தாள்… ஒருவரும் பேச முடியாமல் இருக்கவும்,பாட்டி தனது குரலை உயர்த்தியவாறே, “நல்ல வேளையாக…இந்த மேட்டர் கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சது…இல்லையின்னா..அபியை காலமெல்லாம் சந்தேகத்திலே கொன்னுருப்பாங்க…உங்க ரெண்டு குடும்பமும் உடஞ்சிருக்கும்..” “…………..” “நாளைக்கு எவனோ வந்து பொண்ணு பார்த்தாலும்,விசாரிச்சிட்டு..இதே மாதிரி சந்தேகப்படமாட்டான்னு என்ன உத்தரவாதம்..?” அபியின் அம்மா,பாட்டியை இடை மறித்து… “நீ என்னம்மா சொல்ல வர்ற…ஏதாவது சொல்லி எங்க ரெண்டு குடும்பத்துக்குள்ள “பாம்” போட்டுறாத…”என்று எச்சரிக்கையாக சொன்னதும்,எல்லோருக்கும் பயம் நிலவியது.. “மகாலெக்ஷ்மி…பித்துகுளியா எதாவது சொல்லி…என்கிட்ட அடி வாங்கிறத..” என்று அபியின் தாத்தா எகிறினார்.. பாட்டி உடனே,அவரிடம், “எனக்கு உங்க நட்பு எவ்வளவு தூய்மையானதுன்னு…எனக்கு தெரியும்…நான் சொல்ல போற விஷயத்தை பொறுமையா கேளுங்க…நான் சொன்னதை கேட்டா..ரெண்டு குடும்பத்துக்கும் நல்லது….”என்று சொன்னதும்….அபியின் அப்பா “அத்தை…பீடிகை போடாமல் சொல்லுங்க ” என்றார். பாட்டியை எல்லோரும் பார்க்க, அவள் என் அப்பாவை நோக்கி வந்து, “ரெண்டு குடும்பவும் நல்ல இருக்கணும்…உங்க ரெண்டு பேர் நட்பும் தலைமுறையா தொடரணும்ன்னு நீங்க நினைச்சீங்கன்னா…ஒரே வழி தான் இருக்கு…அபியை ரகுவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுங்க..உங்களை விட அவளுக்கு நல்ல மாமியார்,மாமனார் கிடைக்காது…ரகுவும் அவளை உயிரா பார்த்துக்கிடுவான்…என்ன சொல்லுறீஙக..” என்றதும், அப்பாவுக்கும்,அம்மாவுக்கும் என்ன சொல்லுவதென்று தெரியாமல் விழித்ததும்,அபியின் அம்மா. “அம்மா,உனக்கு புத்தி கெட்டு போச்சா…அபி அவனை விட மூனு வயசு பெரியவ…” என்று கத்தினாள்… என் அப்பா சில நொடிகளில் தனது தொண்டையை செருமிக் கொண்டு ,என் அம்மாவை பார்த்து விட்டு… பாட்டியிடம், “எனக்கு சம்மதம்மா…அபிய விட எனக்கு ஒரு நல்ல மருமகள் தேடினாலும் கிடைக்கமாட்டாள்.. அவளை நாங்க எங்கள் மகளைப்போல பார்த்துகிடுவோம்….”என்று சொல்லி அபியின் அப்பாவை நோக்கி, “அபியை எனக்கு மருமகளா குடுடா.. .
நம்ம தூய்மையான நட்பின் பேரில கேக்குறேன்” எனறதும் அபி அப்பா,என் அப்பாவை அணைத்து கொண்டார். அபி கதறி அழத்தொடங்கினாள்…அவளை என் அம்மாவும்,அவளது அம்மாவும் ஆறுதல் சொல்ல,அபி எனது அம்மா,அப்பாவின் காலில் விழுந்து அழுதாள்… எனக்கு எதோ சினிமாவை பார்ப்பது போல இருந்தது..நடப்பது எல்லாம் கனவா,இல்லை நினைவா என்று கூட தெரியாமல் எதோ ஆகாயத்தில் பறப்பது போல இருந்தேன்…. “என்னடா…கல்யாணக்கனவா?” என்று பாட்டி என்னை கலாய்த்தாள்…அபியை பார்க்க வெட்கமாக இருந்தது…அபியும் வெட்கத்தோடு ரூமிற்க்குள்ளே ஓடி விட்டாள்… அதற்கு பின்பு வந்த நாட்களில் எங்கள் இரு குடுபங்களிலும்,மகிழ்ச்சி தாண்டவமாடியது…என்னமோ தெரியவில்லை…அதற்கு பிறகு அபியிடம் பேசும்போது எதோ ஒரு தயக்கம் இருந்தது..அபியும் என்னிடம் குனிந்து, எனது முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் வெட்கப்பட்டு கொண்டே,நான் நான்கு வார்த்தை பேசினால்,ஒரு வார்த்தையில் பதில் சொன்னாள். எனக்கு லீவ் முடிந்து நான் சிங்கப்பூர் செல்லும் நாளும் வந்தது…ஏற்கனவே தை மாதத்திற்கு அப்புறமாக திருமணம் செய்ய நாள் குறித்திருந்தார்கள்..ஏர்போட்டில் அபியின் கண்களில் கண்ணீர் ததும்ப அழுது கொண்டிருந்தாள்..என் அம்மா அவளை அணைத்து கொண்டே,என்னிடம் அபியை தனியே அழைத்து சென்று,பேசச்சொன்னாள்..உடனிருந்த பாட்டியும்,எங்களோடு வர…அபியின் அப்பா, “அத்தை நீங்க எங்க போறீங்க…கரடி மாதிரி…” என்று சொல்ல “என்ன சொன்னீங்க..கரடியா..நான் பிள்ளையார் மாதிரி ” என்று சொல்லிவிட்டு எங்களை தனியே அழைத்து வந்து, “உங்க ரெண்டு பேருக்கும் இப்போ சந்தோஷமா…” என்று கண்சிமிட்டினாள்…
“என்ன..பா..ட்ட்..டி..புதுசா…ஒரு மாதிரியா கேக்குறீங்க..” என்று அபி மெல்லமாக கேட்டதும், “தை மாசத்தில முறையா கல்யாணம் செய்யப்போனாலும், நீங்க ஏற்கனவே மனசாலயும்,உடலாலயும் புருஷன்,பொண்டாட்டியா தான் வாழுறீங்க..உண்மைத்தானே?” என்றதும்,அபியும், நானும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு,தயங்கியவாறே, “பா..ட்..ட்..டி..அது..வ..ந்து…உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று நடுக்கத்தோடு கேட்க, பாட்டி புன்னகைத்தவாறே, “போன தடவை ஊர் திருவிழாவுக்கு வந்த போது ,நீங்க மேல் மாடியில தங்கியிருந்த போது,உன் அப்பா உன்கிட்ட பேசனும்ன்னு சொன்னார் ரகு..நான் உன்னை எழுப்பலாம்ன்னு உன் ரூமிற்கு வந்தால்,நீ உன் ரூமில் இல்லை….ஆனால்,அபி ரூமில இருந்து சத்தம் வந்தது…மெல்ல ரூமிற்க்கு பக்கத்தில வந்த போது ….” என்றவளை அபி இடைமறித்து, “மன்னிசிடுங்க பாட்டி, ரகுவும் நானும் ரெம்ப நாளா காதலிக்கிறோம்..வயசு வித்தியாசம் என்பதால வெளிய சொல்லமுடியல…ஒருத்தர விட்டு ஒருத்தர் பிரிய முடியாத அளவுக்கு உடலால சேர்ந்திட்டோம்..” என்று பாட்டியின் கைகளை பிடித்தாள்.. “அபி…உன் பாட்டி ஒன்னும் பழைய பஞ்சாங்கம் கிடையாது…உங்க ரெண்டு குடும்பத்துக்கிடையே உள்ள பந்தம் விட்டிடக்கூடாதுன்னு தான் நானும் வெளியே சொல்லல…நீ மேல் படிப்பு படிக்க போறேன்னு சொன்னது கூட ,ரகு படிச்சு முடிக்கத்தான்னு எனக்கு புரிஞ்சது..அதனால ரகு அப்பாகிட்ட சொல்லி ..உன் அப்பாவை கன்வின்ஸ் செஞ்சேன்…” என்றதும்,அபி பாட்டியை கட்டி பிடித்து முத்தமிட்டாள்…
எனது மனம் ஆறாமல், “அது சரி பாட்டி…அபியை பொண்ணு பார்க்க வந்தவங்க..ஏன் எங்களை தொடர்பு படுத்தி பேசுனாங்க..எப்படி நாங்க ரெண்டு பேரும் வெளியே சுத்தினது தெரியும்..?” என்றதும், “…இவ்வளவு வேலை செஞ்ச எனக்கு அது என்ன பெரிய புண்ணாக்கு வேலை?…ஒரு ரூபாயில பப்ளிக் பூத்தில போய் மாப்பிள்ளை அம்மாகிட்ட யாரோ பேசுற மாதிரி வத்தி வச்சிட்டேன்..இல்லதும்,பொல்லாததுமா….. அந்த அம்மா ஏற்கனவே ஒருமாதிரி தான்…உங்க ரெண்டு பேரையும் சினிமாக்கு போக சொல்லிட்டு,அந்தம்மாக்கு போன போட்டு சந்தேகமா இருந்தா போய் பாருஙகன்னு ..சொன்னேன்….அப்படியே நான் நினைச்சது போல நடந்தது…” என்றதும்,எனக்கு கண்கள் கலங்கியது…
“பாட்டி..எங்களுக்காக..நீங்…க..” என்று அபி அழத்தொடங்கினாள்…பாட்டி அவளை அணைத்தவாறே, “நீ என் உயிர் அபி…உன் ஆசை தான் என் ஆசையும் ….இனிமேல் எதை பத்தியும் நீங்க கவலைப்படாமல் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழணும்…அது தான் இந்த பாட்டியோட ஆசை…இந்த விஷயம் நம்ம மூணு பேருக்குள்ளே இருக்கணும்,யாருக்கும் தெரியக்கூடாது” என்று சொல்லி எங்கள் இருவரது தலையிலும் முத்தமிட்டாள்… “நல்லபடியா கல்யாணம் முடிச்சி கொள்ளுக்குழந்தைகளை குடுங்க…” என்றதும் , “அபிக்கு முதல்ல ஆண் குழந்தை தான் வேண்டுமாம்…அவங்க வீட்டில மூன்று தலைமுறையா ஆண் பிள்ளைகள் இல்லாததால “..
என்று நான் சொன்னதும்,அபி வெட்கப்பட்டாள்…. ஏர்போட்டில் எனது விமான செக்-இன் அறிவிப்பு வந்ததும், எங்களை நோக்கி எஙகளது பெற்றோர்கள் வர,நாங்கள் அவர்களை நோக்கி நடக்கத்தொடங்கினோம்…அபியின் கைகள் என் கைகளைபற்றியிருந்தது…அந்த அழுத்ததில் அவளது காதலில் அழுத்தம் தெரிய அவளைப்பார்த்தேன்..அவள் முகத்தில் காதலில் ஜெயித்த கர்வம் தெரிந்தது… அப்போது ரன்- வேயில் எங்களின் சந்தோஷத்தை போல விமானம் ஒன்று பேரிரைச்சலோடு,மேலே பறக்கத்தொடங்கியது..