மின் இணைப்பு சொடுக்கிகள் இருக்கும் பெட்டியின் அருகில் நின்றிருந்தேன், உள் பக்கமாக இருந்த ஒரு மேசையின் மேல் இயங்கிக் கொண்டிருந்த மின்விசிறி பயனற்று விசிறிக் கொண்டிருந்தது, சற்று திரும்பி சுவற்றில் இருக்கும் சொடுக்கிகளைப் பார்த்து ஒரு அனுமானத்தில் அந்த மின்விறியின் இயக்கத்தை நிறுத்திவிட்டு என் அதிகாரிகளிடம் சென்று அமர்ந்தேன், அவர்கள் எனது இந்த செய்கையை கவனித்து இருப்பார்கள் என்று நான் அறிந்து கொள்ளவில்லை,
என் கல்வி ஆவணங்களை சரிபார்த்து மீண்டும் என்னிடம் கொடுத்து விட்டு,என்னையே சிறிது நேரம் இருவரும் பார்த்தனர், பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து தங்களின் முகங்களை பார்த்து தலையசைத்துக் கொண்டனர், பின் தொடர்ந்து ஓரிரு கேள்விகள் கேட்டு நான் கூறும் பதிலையும் கேட்டு, அமைதியாக இருந்தனர், நான் எந்தவொரு பதட்டமும் இல்லாமல் மிகச் சாதாரணமான அவர்களிடம் இயல்பாக இருக்கும் நிதானத்தை அறிந்து கொண்டு, அவர்கள் இருவரும் தங்கள் முகங்களில் புன்னகையை காட்டியவாறு என்னிடம், ஓகே மிஸ்டர் ரகு நீங்கள் வெகுவிரைவில் இந்த நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த பணியாளர்களுக்கு மேற்பார்வையாளராக இருக்கப் போகிறீர்கள் என்பதை எங்கள் வாழ்த்துக்களோடு உறுதியளிக்கிறோம்,என்றபோது நான் மிகவும் சந்தோஷமாக அவர்களைப் பார்த்து நீங்கள் கொடுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நானும் எனக்கு கீழே பணி செய்யும் பணியாளர்களும் சேர்ந்து இந்த நிறுவனம் மேலும் வளர்ச்சி அடைய உழைப்போம் என்று சொல்ல, அவர்கள் இருவரும் சேர்ந்து தங்களின் கரங்களைத் தட்டி ஓசையெழுப்பி என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கினார்கள், நான் எழுந்து அவர்களிடம் விடைபெற்று வெளியே வருவதற்கு எத்தனித்த தருணத்தில் ஆம் மிஸ்டர் ரகு நீங்கள் கொஞ்சம் வெளியே காத்திருக்க வேண்டும், ஏனெனில் உங்களுக்கான பணி நியமன கடிதமும்,பயணப் படியும் வழங்கி நீங்கள் எப்போது உங்கள் வேலையைத் தொடர வேண்டும் என்பதையும் கேட்டறிந்த பின் நீங்கள் செல்லலாம் என்று கூறினார்கள், நான் மீண்டும் அவர்களை வணங்கி விடைபெற்று வெளியே வந்து அமர்ந்தேன், நான் வெளியே வந்த சில நிமிடங்களில் மஹாலட்சுமியும் வெளியே வந்து என் இருக்கைக்கு பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள், நான் அவளைப் பார்த்து சிறிய புன்னகையை உதிர்த்து விட்டு நீங்களும் இந்த நிறுவனத்தின் வேலைக்கு நியமனம் ஆகியிருக்கிறீர்களா என்று கேட்டேன், அவள் என் முகம் பார்த்து சற்று புன்னகைத்து விட்டு ஆமாம் எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்டாள்,
நான் அவளின் முகத்தைப் பார்த்து, உங்களின் முகமே எனக்கு அந்த விஷயத்தை சொல்லி விட்டது அதனால் தான் உங்களிடம் கேட்டேன் என்று சொல்ல,
அவள் சற்று ஆச்சரியம் கலந்த பார்வையை என்மீது வீசினாள், பிறகு சுதாரித்து உங்களின் திறமையை கவனித்தேன், மற்றும் உங்களுக்கு முன் இருந்த அதிகாரிகள் கைதட்டி ஆரவாரம் செய்ததையும் பார்த்தேன், எனது வாழ்த்துக்கள் என்றாள்,
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் மஹா என்றேன், உடனே அவள் என்னைப் பார்க்க நான் நிதானமாக அவளிடம் உங்கள் பெயர் மஹாலட்சுமி என்பதை உங்கள் நேர்காணல் அழைப்பின் போது தெரிந்து கொள்ள முடிந்தது என்று சொல்ல,
அவள் சற்று தலையை தாழ்த்தி புன்னகையை சிந்திவிட்டு என்னை ஏறெடுத்துப் பார்த்தாள், அவளின் புன்னகை நிறைந்த முகத்தை பார்த்ததும் எனக்கு உடலில் இருந்த மயிர்க்கால்கள் எல்லாம் சிலிர்த்தது, ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு வந்து என்னை ஆட்கொண்டது, அந்த நேரத்தில் தான் ஒருவர் வந்து இங்கு மிஸ்டர் ரகு யாருங்க என்று கேட்டார்,
நான் இங்கு இருக்கிறேன் என்று சொல்ல, அவர் என்னருகே வந்து இது உங்கள் பணி நியமன உறுதிக் கடிதம் என்று நீட்டினார், நான் அவற்றைப் பெற்றுக் கொள்ள, மறுபடியும் அவர் இங்கு மஹாலட்சுமி யார் என்று கேட்க அவள் எழுந்து நின்று அறிமுகம் செய்து கொண்டு அவளின் பணி நியமன உறுதிக் கடிதம் பெற்றுக் கொண்டாள்,
அந்த நபர் எங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு சென்றார், நான் அவளைப் பார்த்து சரி நான் போகலாம் என்று நினைக்கிறேன் நீங்கள் வேண்டுமானால் இருந்து உங்கள் தோழியும் வாருங்கள் என்று சொல்ல,
அவள்,ஐயோ எனக்கு இங்கு யாரும் தோழி இல்லை, ஏதோ அருகில் இருந்த ஒரு பெண் என்னிடம் சில விஷயங்களை பேசிக் கொண்டு இருந்தாள் அவ்வளவு தான், நானும் கிளம்ப வேண்டியது தான் வாருங்கள் போகலாம் என்று சொன்னாள்,
இப்போது எனக்கு உள்ளுக்குள் உள்ளத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது, இப்படி ஒரு அழகி என் வாழ்விலும் இணைந்து பயணித்தால் என்னைவிட பாக்கியசாலி யாரும் இருக்க முடியாது என்று நினைத்தேன்,
எல்லோருக்கும் எல்லாமும் நினைத்தபடியே நடந்துவிட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் என்பது இருக்கவே இருக்காது என்பது எங்கள் இருவருக்கும் நடுவில் நடக்கப்போகும் ஊழ்வினைகளை அப்போது நான் அறியவில்லை என்பதுதான் உண்மை,
பிறகு நாங்கள் இருவரும் சேர்ந்து வெளியே வந்து ஒரு நல்ல உணவகத்தில் சாப்பிடலாம் என்று சொல்ல, அவளும் என்னிடம் இதைத் தான் சொன்னாள், பிறகு ஒரு உணவகத்தில் இருவரும் சேர்ந்து சாப்பிட்டோம்
மீண்டும் இணைவோம்!