சென்ற பகுதியின் தொடர்ச்சி…
கோமதி பற்றிய நினைப்பு வந்ததும் படுக்கை விட்டு எழுந்து சுறுசுறுப்பாகி பல் விளக்கி முகம் கழுவி ப்ளாட்டை விட்டு வெளியே வந்தேன். மணி ஏழுக்கு மேல் ஆகியிருந்தாலும் பனி மூடிய மேகங்களாக இருந்ததால் வெயில் அதிகமாக தெரியவில்லை.. சில்லென்று பனிக்காற்று தான் முகத்தில் பட்டது.
நானிருக்கும் பிளாக்கு முன்னால் ஒரு நான்கு அடிக்கு தார் ரோடு நீளமாக போடபட்டு இருந்தது. அதில் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். இந்த அபார்மெண்டிற்கு புதிதாக குடி வந்திருப்பதால் பெரிதாக யாரும் பழக்கம் இல்லை. அதனாலே ஸ்டோன் பெஞ்சில் உட்காராமல் தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தேன்.
இந்த நடைபயணத்திலும் கோமதி பற்றிய எண்ணங்கள் தான் முழுமையாக நிரம்பியிருந்தன. அந்த எண்ணங்களுடனே நடையை தொடர்ந்தேன். அந்த சில்லென்று காலையில் தொடர்ந்து அரைமணி நேரத்திற்கு மேலாக நடந்ததால் உடல் வியர்த்து வியர்வை வழிய ஆரம்பித்ததால் அங்கிருந்த பூங்காவில் சிறிய மரத்தை ஒட்டி போடபட்டிருந்த ஸ்டோன் பெஞ்சில் உட்காந்திருந்தேன்.
அப்போது என்னுடைய வயதை தாண்டிய நபர் ஒருவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்து அவராக தன்னை
“ஹாய் ஜென்டில்மேன் ஐயம் தனிகாச்சலம் ரிட்டயர்ட் கவர்மெண்ட் ஸ்டாப்” சொல்லிவிட்டு அடுத்தடுத்து அவராகவே அவருடைய குடும்பத்தை பற்றியும் குடும்பத்தில் இருப்பவர்கள் நடந்து கொள்வதை பற்றியும் புலம்பி தள்ளிக் கொண்டிருந்தார்.. அவருடைய பேச்சை முடித்ததும்
“ஆமா நீங்க யாரு சொல்லவே இல்ல” ரொம்ப வெகுளியாக கேட்டார்..
“நா வெங்கடேசன் ரியர்ட் ஆர்மி.” சொல்ல
“உங்கள பாத்த ரியர்ட் ஆகுற வயசா தெரியலேயே?” கேட்க
“ஆமா இன்னும் சர்விஸ் இருக்கு.. நா தான் வி. ஆர். எஸ் வாங்கிட்டேன்..”
“ஓ.. அப்படியா.?”
“ஏன் வி. ஆர். எஸ்..?
“என்னுடைய பொண்ணுக்கான கடமை முடிஞ்சது.. அதான் போதும் சொல்லிட்டு வி. ஆர். எஸ்..” சொல்ல
“ஓ.. சரி.. பொண்ணு எங்க இருக்கா?”
“அவ மேரேஜ் ஆகி யூ.எஸ்ல செட்டில் ஆகிட்டா..”
“அப்படியா.. இங்க யார் கூட தங்கியிருக்கிங்க..”
“யாரும் இல்ல.. நா மட்டும் தான்.” சொல்ல
உடனே தனிக்காசலம்,” நீ ரொம்ப பாக்கியம் பண்ணியிருக்கிங்க.. உங்களுக்கு எந்த பிக்கல் புடுங்கல் இல்ல. உங்கள் கடைசி காலத்த நிம்மதி கழிக்கலாம்” சொல்ல எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.. என் மனத்தில் இருக்கும் தனிமை போராட்டம் பற்றி இவருக்கு என்ன தெரிய போகிறது என எனக்கு நானே சமாதானம் செய்துக் கொண்டேன்.
“இல்ல.. நா பாக்கியசாலி இல்ல.. தனிமையில வாழ்ந்து கடைசியில தனிமையில இருக்குறேன்.. உங்கள மாதிரி சிலர் தனிமை இனிமையானது சொல்லிடுவிங்க.. ஆனா அதை அனுபவிக்குற எனக்கு தான் தெரியும் அது இனிமையா? கொடுமையா?”
“அட போங்க.. என்னோட வீட்டுல எப்ப பாத்தாலும் கசகச்ச சத்தமும் சண்டையுமா தான் இருக்கும். அதிலே எனக்கு இரிடேஷன் ஆகி பிபி எகிறிடும்.. இதெல்லாம் உங்க வீட்டுல இருக்காதுல சார்வாள்..”
“ம்ம். ஆமா.. ஆனா எனக்கு என் குழந்தைங்க பேரன், பேத்தியோட இருக்க தான் ஆசை.”
“இந்த கடவுள் செய்யுற திருவிளையாடல் பாருங்க.. உங்களுக்கோ என் குடும்பம் மாதிரி வேணும்.. எனக்கோ உங்கள மாதிரி இருக்கனும் ஆசை” என்றார்..
இந்த தனிக்காசலம் நல்லா ஜாலியாக பேச கூடிய ஆளாக இருக்கிறார். இவரிடம் இந்த அபார்மெண்டில் இருக்கும் கோமதி பற்றி கேட்கலாமா என்ற யோசனை கூட வந்தது.
முதலில் இவருக்கு அந்த பெண்மணி பற்றி தெரிந்திருக்க வேண்டும். அப்படியே தெரிந்திருந்தாலும் கேட்டதும் தவறாக எதுவும் எடுத்துக் கொள்ளாமல் பதில் சொல்லுவாரா என தெரியவில்லை. ஒரே குழப்பமான மனநிலையில் இருந்தேன். நானிருக்கும் நிலையை பார்த்துவிட்டு
“என்ன சார்வாள் ஏதோ சிந்தனையிலே இருக்கீங்க..?”
“அட அது ஒன்னுமில்ல. விடுங்க..”
“சரி நீங்க எந்த ப்ளாக்ல எந்த பிளாட் சொல்லுங்க..” கேட்க நானும் நானிருக்கும் ப்ளாக் மற்றும் பிளாட் சொல்ல அவர்,
“நா மேலிருந்து கீழே இறங்கி மூனு ப்ளாக் நடந்து திரும்பி மேலே ஏறனுமா?” மூச்சு வாங்க சொல்ல எனக்கு சிரிப்பு தான் வந்தது..
“நீங்க கவலைபடாதீங்க. சும்மா இருக்குற நேரத்துல பால்கனி இருக்குல. அதுல தான் சேர் போட்டு உட்காந்து ஏதாவது படிச்சிட்டு இருப்பேன். நீங்க கீழே இருந்து கூப்பிடுங்க போதும்” சொன்னதும் அவருக்குள் ஒரு மகிழ்ச்சி..
“அப்பாடா.. ரொம்ப தேங்க்ஸ் சார்வாள். அப்போ நாம ஃபிரியா இருக்கும் போது பேசலாம்.. நா அப்படியே நடந்து ப்ளாட்டுக்கு போறேன்” என்றார்.. நானும் அவரை தடுக்காமல் சரி சொல்ல அவர் அந்த ஸ்டோன் பெஞ்சை விட்டு எழுந்து மெதுவாக நடந்து சென்றார்.
காலையில் அந்த நேரத்தில் எல்லோரும் அவரவர் வேலைகளை பரபரப்பாக செய்துக் கொண்டிருந்தனர். நான் மட்டும் தான் என்ன செய்வது என்று தெரியாமல் உட்காந்திருந்தேன். அங்கிருந்து எழுந்து செல்ல கூட மனமில்லாமல் அப்படியே கோமதியை பற்றி நினைத்துக் கொண்டே உட்காந்திருந்தேன்.
காலை வெயில் முகத்தில் பட அப்போது தான் சுயநினைவுக்கு வந்தேன். எவ்வளவு நேரம் அதே இடத்தில் உட்காந்திருந்தேன் என தெரியவில்லை. பின் அங்கிருந்து நடந்து வந்து என்னுடைய ப்ளாட்டிற்கு வந்து சேர்ந்தேன்.
உடல் கொஞ்சம் சோர்வாக இருந்ததால் பிரிஜ்ஜில் இருந்த தண்ணீரை குடித்து விட்டு சோபாவில் உட்கார்ந்து டிவி ஆன் செய்து செய்தி சேனல் வைத்து செய்தியை கேட்டேன். என்னால் ஒருமனதாக அந்த செய்தியை கூட கேட்க முடியவில்லை. இதற்கு காரணம் கோமதி..
இந்த அபார்மெண்டில் இருக்கும் கோமதி நான் காதலித்த கோமதியாக கூட இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் என் மனம் ஏன் அந்த பெண்மணியை பற்றி மட்டும் தெரிந்துக் கொள்ள ஒவ்வொரு வினாடியும் ஆவலாக துடித்துக் கொண்டிருக்கிறது என தெரியவில்லை.
அந்த கோமதியை பற்றிய சிந்தனையிலே முழ்கியிருக்க டிவியில் ஆரம்பித்த செய்தி கூட முடித்துவிட்டது. ஆனால் இன்னும் என் மன பிரச்சனை தான் முடியவில்லை. எல்லாவற்றிற்கும் காலம் கண்டிப்பாக ஒரு பதிலை தரும் என்ற நம்பிக்கையோடு குளிக்க சென்றேன்.
குளித்து முடித்து வந்ததும் பிரிஜ்ஜில் இருந்த மாவை எடுத்து தோசை சுட்டு சாப்பிட்டு மீண்டும் பிளாட்டை விட்டு வெளியே வந்தேன். அந்த அபார்மெண்டில் பெரும்பலான குடும்பத்தில் இருப்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் என்பதால் ஆள் அரவமற்று இருந்தது.
அடுத்து எந்த வேலையும் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் வெளியே வந்து நிழலாக இருக்கும் மரத்திற்கு அடியில் இருந்த ஸ்டோன் பெஞ்சில் உட்காந்திருந்தேன்.. எனக்கு முன்னால் இருந்த ப்ளாக்கில் நிறைய வீடுகள் தெரிந்தன.
இதில் எந்த ப்ளாக்கில் எந்த பிளாட்டில் அந்த கோமதி குடியிருக்கிறாள் என தெரியவில்லை. எனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பையும் வீணடித்துவிட்டதால் எப்படி கண்டுபிடிப்பது என ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் இருந்தேன்.
அதன் பின் அங்கிருப்பது வீண் என்பதால் கிளம்பி பிளாட்டிற்கு வந்து மதியத்திற்கு தேவையான சமையலை செய்து சாப்பிட்டு கோமதி நினைவுடனே
கொஞ்சம் கண்ணை மூடினேன்..
மாலையில் வீட்டிற்கு தேவையான சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால் அபார்மெண்டிற்கு என்டர்ன்ஸ்க்கு வந்து வாட்ச்மேனிடம்,
“டிபார்மெண்டல் ஸ்டோர் எங்க இருக்கு?” கேட்டேன்.
அவனும், “பக்கத்தில ஒரு பலசரக்கு இருக்கு சார். அது பிடிக்கலனா ஒரு ஸ்டாப் தள்ளி நீங்க கேக்குற மாதிரி சூப்பர் மார்க்கெட் இருக்கு. அங்க எல்லாமே கிடைக்கும்” சொல்ல
அவனிடம் “ரொம்ப தாங்க்ஸ்ப்பா” சொல்லிவிட்டு வெளியே வந்து ஷேர் ஆட்டோவில் அந்த சூப்பர் மார்க்கெட் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு திரும்பி அபார்மெண்டிற்கு வந்தேன். அபார்மெண்டில் நுழைந்ததும் திரும்பி அந்த வாட்ச்மேன் என்னை கூப்பிட,
அவனிடம் “என்ன கேட்டேன்.?”
“சார், ஒரு சின்ன உதவி பண்ண முடியுமா?” கேட்டான்
“என்ன உதவி?” கேட்க
“இந்த பார்சல் உங்க ப்ளாக்குல இருக்குற ஒரு வீட்டுல குடுக்கனும்.. பார்சல் வந்ததுல இருந்து நானும் போன் அடிக்குறேன். போன் ஸ்விட்ச் ஆப் வருது.. நீங்க குடுத்திருங்களா?”
“இல்லப்பா நா இந்த அபார்மெண்டிக்கு புதுசு.. எனக்கு வேற யாரையும் தெரியாது.”
“அப்படியா சார்.. பரவாயில்ல சார் நா பாத்துக்கிறேன்” ஒருவித குழப்பத்துடன் கூடிய யோசனையிலே சொன்னான்.
“என்னப்பா யோசிக்குற..?”
“இல்ல சார் இன்னும் கொஞ்ச நேரத்தில நான் டூட்டி மாறிவிடுவேன். அதான் இத எப்படி குடுக்குறது தான் யோசிச்சிட்டு இருக்கேன்” என்றான்
“சரி பேரு, பிளாட் நம்பர் என்னனு?” கேட்க
அவன் “நந்தனா” சொன்னதும் மனதுக்குள் ஒரு சந்தோஷம்.. இருந்தாலும் அம்மாவின் பெயர் என்னனு தெரிய வேண்டும் என்பதால் அவனிடம்
“அந்த பொண்ணோட அம்மா பேரு என்னனு கேட்டேன்.?”
“அதுவா சார் கோமதி அந்த பொண்ணோட அம்மா பேரு..” சொன்னதும் மனதிற்குள் இந்த வயதிலும் ஆயிரம் பட்டாம்பூச்சி ஒன்றாக பறப்பது போன்ற ஓர் இன்ப உணர்வு.. அதை அவனிடம் காட்டாமல்,
“சரி குடு. நானே குடுத்திறேன்” என்றதும் அவனுக்குள்ளும் ஒரு சந்தோஷம்.. உடனே
“இருங்க சார் எடுத்துட்டு வரேன்” சொல்லி அவன் ரூமிற்குள் சென்று ஒரு சிறிய பார்சலை எடுத்து வந்தான்.. அதில் கோமதியின் ப்ளாட் நம்பருடன் ஒரு மொபைல் நம்பரும் இருந்தது. ஆனால் அது யாருடைய நம்பர் என தெரியவில்லை..
“சரி யார் நம்பரா இருந்தா என்ன பாத்துக்கலாம்” அந்த பார்சலை எடுத்துக் கொண்டு வந்து அந்த பிளாட்டின் கதவை தட்டினேன்.. உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. காலிங் பெல் அடித்து பார்த்தேன். அப்போதும் எந்த பதிலும் இல்லை. உடனே என் மொபைலில் அதிலிருந்த நம்பருக்கு கால் செய்து பார்த்தேன். அந்த வாட்ச்மேன் சொன்னது போல் ஸ்விட்ச் ஆப் தான் வந்தது.
“என்னடா இது காலம் செய்யுற ஜாலம் நானாக நினைத்துக் கொண்டேன். இப்ப எப்படி இந்த பார்சல் குடுக்குறது. அந்த கோமதி பாக்குறது” ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் அங்கேயே நின்றேன். இதை எதிர் பிளாட்டில் இருப்பவரிடம் சொல்லி குடுக்க சொன்னால் குடுத்து விடுவார்கள். ஆனால் நம்மால் அந்த கோமதியை பார்க்க முடியாதே என்ன வருத்தம் இருந்தது.
என்ன நடந்தாலும் பரவாயில்லை. இந்த பார்சலை நாம் குடுக்குறோம். அந்த கோமதி பார்க்குறோம் முடிவு பண்ணி அந்த பார்சலை எடுத்து கொண்டு என் பிளாட்டிற்கு வந்தேன்.
அந்த பார்சலை பத்திரமாக வைத்து விட்டு வாங்கி வந்த சாமானை எல்லாம் எடுத்து வைத்து விட்டு மீண்டும் ஒருமுறை அந்த பிளாட்டில் காலிங்பெல்லை அடிக்க மீண்டும் எந்த பதிலும் வரவில்லை என்பதால் கீழே இறங்கி வாட்ச்மேன் இருக்கும் இடத்திற்கு வந்து பார்த்தேன். வாட்ச்மேன் மாறியிருந்தனர்..
இந்த பார்சலை நாம் தான் குடுக்க வேண்டும் என காலம் தீர்மானித்து இருக்கிறது போல் அதான் இவ்வளவு இடைஞ்சல்கள் வந்தாலும் அதிலும் ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது என நினைத்துக் கொண்டு வந்து என் பிளாக்கின் முன் இருந்த ஸ்டோன் பெஞ்சில் உட்காந்திருந்தேன்.
கிட்டதட்ட அரைமணி நேரமாக உட்காந்திருந்தேன். அந்த பிளாட்டின் பால்கனியில் எவரும் வந்து நிற்கததால் இன்னும் ஆட்கள் வரவில்லை என நானாக முடிவு செய்து கொண்டேன்.
இன்றைக்கு அந்த கோமதி பார்க்க முடியாது போல எழுந்து என் பிளாட்டிற்க்கு வந்து எனக்கு தேவையான தோசை சுட்டு சாப்பிட்டு விட்டு டிவி பழைய காதல் பாடல்களை ஓடவிட்டு பார்த்துக் கொண்டிருந்தேன்.
இப்போது போய் பார்க்கலாம் என நினைத்து அந்த பார்சலை எடுத்து கொண்டு அந்த பிளாட்டிற்கு போய் காலிங் பெல் அடிக்க இந்த முறை உள்ளிருந்து
“யாரு இதோ வரேன் சொல்ல” எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் இந்த குரலை இதற்கு முன் எங்கையோ கேட்ட நியாபகம் வருகிறது. ஆனால் யாராக இருக்குமோ என யோசித்துக் கொண்டே வெளியில் அந்த பார்சலை வைத்துக் கொண்டு நின்றிருந்தேன். ஆட்கள் யாரும் வரவில்லை என்பதால் திரும்பி காலிங் பெல்லை அடிக்க உள்ளிருந்து
“அய்யோ மம்மி பெல் அடிச்சிட்டே இருக்கான்.. யாரு போய் பாரு..”
“இருடி டிரஸ் மாத்திட்டு இருக்கேன். நீ தான் போய் பாரேன்..”
“போ மம்மி ஐயம் டயர்ட். நீயே போய் பாரு..” சொல்லி அவர்களுக்குள்ளே பேசிக் கொண்டிருக்க
“இது என்னடா வெறும் சோதனையா வருது” நினைத்துக் கொண்டிருக்க இந்த முறை காலிங் பெல் அடிக்காமல் கதவில் கை வைக்க அந்த சமயம் பார்த்து கதவு திறக்க எனக்கு எதிரே இருந்த பெண்மணியை பார்த்த வினாடியில் அதிர்ச்சியோடு அப்படியே நின்றுவிட்டேன்.
மீண்டும் அவளோடு வருவேன்…